Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கருவாட்டுக் குழம்பு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கருவாட்டுக் குழம்பு

தேவையானவை:

 சீலா கருவாடு - 5 சிறிய துண்டுகள்

 பூண்டு - 5 பல்

 புளி - ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு

 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:

 சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கருவாட்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்து வைக்கவும். பூண்டை உரித்துக்கொள்ளவும். புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். புளித்தண்ணீரில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து, பொரிந்ததும் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் உப்பைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் பூண்டு வெந்துவிட்டதா என்று பார்த்து, பிறகு கருவாட்டைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

சில சீலா கருவாடுகள் சீக்கிரம் வெந்துவிடும். எனவே, கவனித்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும், இல்லை என்றால் கருவாடு, குழம்பில் கரைந்துவிடும். கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால் கருவாடு சேர்க்கும் முன்னர் உப்பு குறைவாகச் சேர்த்து, தேவைப்பட்டால் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம். சைவ உணவுக்காரர்களில், இதே குழம்பில் கருவாட்டுக்குப் பதில் மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் செய்யலாம். பூண்டு வதக்கும்போதே மணத்தக்காளியையும் சேர்த்து வதக்கிவிடவும்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள்.

No comments:

Post a Comment