Thursday 29 September 2016

காயம்

காயம்

காயம்

 

தேவையானவை:

 காயப்பொடி - 150 கிராம்

 முட்டை - 15

 கருப்பட்டி - ஒன்றரை கிலோ

 சர்க்கரை - அரை கிலோ

 கல்கண்டு, நெய் - தலா 200 கிராம்

 பாதாம், முந்திரி - தலா 100 கிராம்

 கசகசா - 25 கிராம்

 நல்லெண்ணெய் - 150 கிராம்

 முழு தேங்காய் - 4

 பூண்டு - 150 கிராம்.

 நெய் - தேவையான அளவு

 

செய்முறை:

தேங்காயைத் துருவி அரைத்து தலைப்பால், இரண்டாம் பால், மூன்றாம் பாலை தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், கசகசாவை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும். தோல் உரித்து பூண்டுப்பல்லை வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து வைக்கவும். தேங்காய்ப்பாலின் இரண்டாம், மூன்றாம் பாலில் கருப்பட்டியை நன்கு பொடி செய்து போட்டுக் கொதிக்க விட்டு மண் வராமல் வடித்துக் கொள்ளவும். தலைப்பாலில் முட்டைகளை நன்கு அடித்து கலக்கி வடித்து வைக்கவும்.

 

கனமான அடிப்பகுதி உள்ள அகன்ற சட்டியில் காயப்பொடி, அரைத்த முந்திரிக் கலவை, சர்க்கரை (சீனி), கல்கண்டு, எண்ணெய், நெய் மற்றும் வேகவைத்து அரைத்த பூண்டு, வடிகட்டிய கருப்பட்டிக் கரைசல், முட்டை கலந்த தலைப்பால் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றை நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு சுண்டி தேவையான பதத்துக்கு (அல்வா பதம்) வரும்போது இறக்கி விடவும்.

 

குறிப்பு:

தேங்காய்ப்பாலில் இரண்டாம், மூன்றாம் பால் எடுக்கும்போது குறைவாக எடுத்தால் போதும். தண்ணீர் கூடினால் அடுப்பில் அதிக நேரம் வைக்க வேண்டி இருக்கும். காயப்பொடி தூத்துக்குடிப் பகுதிகளில் கிடைக்கும். காயம் சாப்பிட்டால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

இந்தக் காயம் மருந்து குழந்தை பெற்ற பெண்கள், வயதுக்கு வந்த பெண்களுக்கு மிக நல்லது, கர்பப்பையை வலுப்படுத்தும்.

 

'காயம்ரெசிப்பியில் சொல்லப்பட்டிருக்கும் 'காயப்பொடி'யை தயாரிக்கும் முறை இதோ...

 

தேவையானவை:

சுக்கு - 100 கிராம்

வாய்விலங்கம் - 50 கிராம்

ஓமம் - 50 கிராம்

கருஞ்சீரகம் - 5 கிராம்

கடுக்காய் - 5 கிராம்

புழுங்கல் அரிசி - 50 கிராம்

சீரகம் - 5 கிராம்

சோம்பு - 5 கிராம்

சாலியா - 5 கிராம்

சதகுப்பை - 5 கிராம்

கசகசா - 5 கிராம்

ஜாதிக்காய் - 5 கிராம்

ஜாதிப்பூ - 5 கிராம்

மஞ்சள் - 5 கிராம்

வெந்தயம் - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

வால்மிளகு - 5 கிராம்

பெருங்காயம் - 5 கிராம்

 

செய்முறை: இவை அனைத்தையும் வெயிலில் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் காயப்பொடி ரெடி.

No comments:

Post a Comment