ராகி சோளம் முறுக்கு
ராகி சோளம் முறுக்கு
தேவையானவை:
ராகி மாவு - 200 கிராம்
சோள மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 150 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
எள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
வெஜிடபிள் ஆயில் - பொரிக்க
மிளகாய்த்தூள் - சிறிதளவு (உங்கள் காரத்துக்கு ஏற்ப)
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் ராகி, சோளம், அரிசி மாவை தனித்தனியாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து வாசம் வரும் வரை கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும். எள்ளில் சிறிது தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற விடவும். மிக்ஸியில் உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொடியாக்கி தனித்தனியாக வைக்கவும். இனி ராகி மாவு, சோள மாவு, அரிசி மாவு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் இறுத்த எள், மிளகாய்த்தூள் என அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அடுப்பை அணைத்து இறக்கவும். தேவையான அளவு தண்ணீரை மிதமான அளவு சூடுபடுத்தவும். மாவில் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிசையும் போதே ஒரு டேபிள்ஸ்பூன் சுட வைத்த எண்ணெயை விட்டுக் கொள்ளவும். மாவை மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் ஊற விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் சிறிது மாவை எடுத்து எண்ணெயில் விட்டால் சுறுசுறுவென சத்தம் வர வேண்டும். அப்போதுதான் எண்ணெய் சரியாக காய்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இனி முறுக்கு அச்சை எடுத்து, அதில் மாவை வைத்து சுருள் சுருளாக வருமாறு அழுத்தி கரண்டியின் பின்புறம் பிழிந்து விடவும்.இனி, பிழிந்த முறுக்கை பிரவுன் நிறம் வரும் வரை இரண்டு புறமும் வேக விடவும். இரண்டு புறமும் முறுக்கு வெந்துவிட்டால் எண்ணெயில் சத்தம் இருக்காது. முறுக்கை எடுத்து கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் உறிஞ்சி சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது பரிமாறவும்.

No comments:
Post a Comment