பாலடை ஸ்டஃப்டு சப்பாத்தி
பாலடை ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை:
பாலடை - கால் கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பாலடையை தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிகட்டி பாலாடையை தனியாக வைக்கவும். வறுத்து பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு கரைய வதங்கியதும், பாலடையைச் சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, கொத்தமல்லித்தழைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வறுத்து பொடித்தவற்றைச் தூவி இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும், இத்துடன் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். தேவைப்பட்டால், சிறிதளவு நீர் விட்டுப் பிசையவும். இனி, பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல தேய்த்து உருட்டி வைக்கவும். பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேய்த்த சப்பாத்திகளைச் சேர்த்து, இருபுறமும் வேகவைத்தெடுத்து ஆனியன் ரைத்தாவுடன் சேர்த்துப் பரிமாறவும்
குறிப்பு:
இரண்டு லேயர் சப்பாத்திகளின் நடுவே கிரேவியை வைத்து மூடி தேய்த்து, சுட்டெடுக்கும் சப்பாத்திகளைவிட இந்த முறையில் செய்தால் ருசியாக இருக்கும்.

No comments:
Post a Comment