பாலடை ஊத்தப்பம்
பாலடை ஊத்தப்பம்
தேவையானவை:
பாலடை - கால் கப்
இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பீன்ஸ் - 6
கேரட்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
குடமிளகாய் - பாதியளவு
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலடையைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். கனமான அடிப் பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி ஊறிய பாலடையையும் (நீரை வடித்துவிட்டு) சேர்த்து வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய குடமிளகாய், துருவிய கேரட் சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வதக்கிய கலவையை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு மாவை எடுத்து ஊத்தப்பமாக ஊற்றவும். ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும். விருப்பமிருப்பவர்கள் வேகவைக்கும்போது சீஸை துருவிச் சேர்த்து வேகவிட்டு எடுத்துப் பரிமாறலாம். இந்தப் பாலடை ஊத்தப்பத்தை (பாலடை மாவில் ஊறி தனிச் சுவையுடன் இருக்கும்) சாம்பார் அல்லது இட்லி மிளகாய்ப்பொடியுடன் சுவைக்கவும்.

No comments:
Post a Comment