ராஜ் போக்
ராஜ் போக்
பனீர் செய்யத் தேவையானவை:
பால் - 8 கப்
எலுமிச்சைச் சாறு - கால் கப்
வெந்நீர் - அரை கப்
ராஜ் போக் செய்ய
பனீர் - தேவையான அளவு
சர்க்கரை - இரண்டரை கப்
தண்ணீர் - 5 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பனீர் செய்ய:
எலுமிச்சைச் சாறை அரை கப் வெந்நீரில் கலந்து தனியாக வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பாலைச் சேர்த்து, கிளறவும். பால் அடிப்பிடித்து கருகிவிடக்கூடாது. பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து மெதுவாக இடைவிடாமல் கிளறவும். இப்போது பால் திரிந்து, தண்ணீர் தனியாக, திரிந்த பால் தனியாக மிதக்க ஆரம்பிக்கும். மஸ்லின் துணி விரிக்கப்பட்ட வடிகட்டியில் திரிந்த பாலை வடிகட்டவும்.
இனி வடிகட்டியவற்றை அப்படியே குளிர்ந்த நீரில் சிலமுறை நன்கு அலசவும். அப்போதுதான் திரிந்த பாலில் உள்ள எலுமிச்சையின் வாசனை சுத்தமாக அகலும். பிறகு துணியை நன்கு அழுத்தி பிழிந்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டவும். இதுதான் பனீர். பனீரின் மேல் கனமான பொருளை வைத்து, அப்படியே ஒரு மணிநேரம் செட்டாக விடவும். பிறகு பனீரை எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு அழுத்தி தேய்த்த பிறகு உருண்டை பிடித்தால், எளிதான உருண்டையாக உருட்ட வரவேண்டும். அதுதான் பனீரில் உள்ள தண்ணீர் வடிந்துவிட்டது என்பதற்கான அறிகுறி.
பனீரை எடுத்து சுத்தமான இடத்தில் வைத்து நான்கு நிமிடம் நன்கு தேய்க்கவும். அப்போதுதான் பனீர் நன்கு மிருதுவாகும். ஒருவேளை பனீர் உதிர்ந்து வந்தால், சிறிது தண்ணீர்விட்டு தேய்க்கவும். உருட்டிய பனீரை நன்கு தேய்த்து சமமான ஓவல் ஷேப் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இனி சிரப் செய்ய, அடுப்பில் வாய் அகன்ற பெரிய வாணலியை வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். இதில் பனீர் உருண்டைகளை சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பு தீயை மிதமாக்கி, மூடி போட்டு பத்து நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியை திறந்து உருண்டைகளை திருப்பிவிட்டு குங்குமப்பூ சேர்த்து மேலும் பதினைந்து நிமிடம் மூடிபோட்டு வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் சிரப்பிலேயே இருக்கவிட்டு பிறகு ஃபிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பிறகு சிரப்புடன் சில்லெனப் பரிமாறவும்.

No comments:
Post a Comment