Saturday 8 October 2016

பஞ்சாபி காலீ சென்னா மசாலா

பஞ்சாபி காலீ சென்னா மசாலா

பஞ்சாபி காலீ சென்னா மசாலா

 

தேவையானவை: வெள்ளைக் கொண்டக்கடலை - 250 கிராம்,வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது), துருவிய தக்காளி (அ) தக்காளி ப்யூரி - 2 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்சென்னா மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், காலா நமக் (இந்துப்பு)  அரை டீஸ்பூன், அனார்தானா தூள் (மாதுளை விதைத்தூள்) - 1 டீஸ்பூன், பஞ்சாபி கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - 2 டீஸ்பூன் (நீளவாக்கில் அறிந்தது), சிகப்பு மிளகாய் - 3, பெரிய நெல்லிக்காய் - 1, தேயிலை - 2 டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  தேவையான அளவு, நெய்  சிறிதளவு

 

செய்முறை: கொண்டக்கடலையைத் தண்ணீரில் ஊற வைக்கும்போது கூடவே, நெல்லிக்காயை இடித்து, அத்துடன் தேயிலையைச் சேர்த்து மெல்லியப் பருத்தித் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி 10 மணி நேரம் ஊற வைக்கவும் (இதனால் நெல்லி மற்றும் தேயிலையின் நிறமும் மணமும் அந்த தண்ணீரில் இறங்கும்). பிறகு அந்தத் தேயிலை மூட்டையை அகற்றி விட்டு, அந்த தண்ணீருடன் குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, தக்காளியைச் சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், சென்னா மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள கொண்டக்கடலையைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கலந்ததும் இந்துப்பு, பஞ்சாபி கரம் மசாலாத்தூள், மாதுளை விதைத்தூள் சேர்த்துக் கிளறவும்.

 

இன்னொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து, தயாரித்து வைத்துள்ள கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இதை ரொட்டியுடன் சூடாகப் பரிமாறலாம்.

 

 

No comments:

Post a Comment