ஸ்பைஸி சாமைக் கஞ்சி
ஸ்பைஸி சாமைக் கஞ்சி
தேவையானவை:
சாமை - 30 கிராம் (கழுவி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்)
பயத்தம் பருப்பு - 30 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கேரட் - 25 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 500 மில்லி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - கால் டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 100 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - சிறு துண்டு
கறிவேப்பிலை - 10 - 15
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சில துளிகள் (விருப்பம் இருந்தால்)
கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
கேரட், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் இறுத்த சாமை, அரைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு இரண்டு விசில் வைத்து வேக விடவும். அடுப்பை அணைத்து குக்கரின் சூடு ஆறியதும் மூடியைத் திறந்து தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும்.
மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான சூடுபடுத்தி தேவைப்பட்டால் மிளகுத்தூள் அதிகம் சேர்த்து, ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். கூழ் சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச்சாறு சில துளிகள் விட்டுச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment