மஷ்ரூம் ஸ்பிரிங் ரோல்ஸ்
மஷ்ரூம் ஸ்பிரிங் ரோல்ஸ்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
குடமிளகாய் - 25 கிராம்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 3
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
சோயா சாஸ் - சிறிதளவு
சிவப்புமிளகாய் சாஸ் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
10 மில்லி அளவு எண்ணெயை வாணலியில் சேர்த்து சூடு செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை நன்கு பிசையவும். இதில் சூடு செய்த எண்ணெயை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் மாவைக் கெட்டியாகப் பிசையவும். இதை ஒரு துணி கொண்டு மூடி அரை மணிநேரம் ஊறவிடவும். காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான், குடமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோயா சாஸ், சிவப்புமிளகாய் சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி, பின்பு, வெங்காயத்தாளைத் தூவிவிட்டு இறக்கவும்.
ஊற வைத்துள்ள மாவை, சப்பாத்திக்கு உருட்டும் அளவில், சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேய்த்துக் கொள்ளவும். இதை, கத்தியைப் பயன்படுத்தி இரண்டாக கட் செய்து கொள்ளவும். அரை வட்டவடிவில் இருக்கும் ஒரு மாவுத் துண்டை எடுத்து, அதன் நடுவில் சிறிது மசாலாவை வைத்து, இரண்டாக மடித்துக்கொள்ளவும். பார்க்க முக்கோண வடிவில் இருக்கும். இதில் கூர்முனையின் எதிர்புறத்தில் இருக்கும் பகுதியிலிருந்து மெதுவாக ரோல் செய்யவும். இறுதியில் முடிவடையும் கூர்முனையை சிறிது தண்ணீர் தொட்டு ஒட்டவும். உள்ளே இருக்கும் ஸ்டஃபிங் வெளியே வராத அளவுக்கு உருட்ட வேண்டும். இப்போது அழகான ஒரு ரோல் கிடைக்கும். இதேபோல மீதம் உள்ளவற்றையும் ரோல் செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ரோல்களைச் சேர்த்து பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இந்த மஷ்ரூம் ஸ்பிரிங் ரோல்களை சூடாக தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment