ராகி மஸ்ரூம் ஸ்டஃப்டு பன்
ராகி மஸ்ரூம் ஸ்டஃப்டு பன்
தேவையானவை:
கோதுமை மாவு - 100 கிராம்
ராகி மாவு - 75 கிராம்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
சர்க்கரை/தேன்/வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் - 100 மில்லி
பால் - 25 மில்லி
ஸ்டஃபிங் செய்ய (மஸ்ரூம் மசாலா தயாரிக்க):
மஸ்ரூம் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை குடமிளகாய் - ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து வைக்கவும். இதில் ஈஸ்ட்டைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும். இதை மூடி போட்டு பத்து நிமிடம் பொங்க விடவும். இத்துடன் பாலைச் சேர்த்து நன்கு கலக்கவும். மீண்டும் மூடி போட்டு பத்து நிமிடம் பொங்க விடவும். கோதுமை மாவு மற்றும் ராகி மாவை ஒன்றாக்கி சலித்து வாய் அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். இதில் பொங்கிய ஈஸ்ட்- பால் கலவையைச் சேர்த்து உப்பு சேர்த்து ஸ்பூனால் மாவை மெதுவாகக் கிளறவும். மாவு ஒட்டும் பதத்துக்கு வந்ததும், சிறிது மாவை தூவிப் பிசைந்து உருட்டி சிறிது எண்ணெய் தடவவும். அவனில் வைக்கும் பவுலில் சிறிது எண்ணெய் தடவி, அதில் மாவை வைத்து ஒரு கிச்சன் டவலால் மாவை மூடி சூடான இடத்தில் இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும்.
மஸ்ரூம் மசாலா தயாரிக்க:
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகைச் சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போனதும், மஸ்ரூம், குடமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத் தூள், உப்பு சேர்த்துக் கிளறி குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக விடவும். மஸ்ரூம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கலவையை நன்கு ஆற விடவும். மூடி வைத்திருக்கும் மாவை திறந்தால் மாவு உருட்டிய சைஸை விட டபுளாக உப்பி இருக்கும்.
மறுபடியும் மாவை கைகளால் நன்கு பிசையவும். இதை நான்கு உருண்டைகளாக தனியாகப் பிரித்து உருட்டவும். சிறிது கோதுமை மாவு தொட்டு உருண்டையை சற்று தடிமனான ரொட்டி வடிவத்துக்கு வட்டமாக தட்டி அதன் நடுவே மஸ்ரூம் கலவையை ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து வைக்கவும். அதிகமாக வைக்க வேண்டாம். இனி மாவை மூடி வட்டமான பந்து போல மெதுவாக உருட்டவும். இதை வெப்பமான இடத்தில் நாற்பது நிமிடம் வைத்து விடவும். இப்படி அனைத்து உருண்டைகளையும் உருட்டி தனியாக வைக்கவும்.
அவனை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் சூடுபடுத்தவும். பேக்கிங் டிரேயில் சிறிது எண்ணெய் தடவவும். இனி ஒவ்வொரு பன்னிலும் பால் நன்கு தடவி பேக்கிங் டிரேவில் வைக்கவும். அவனில் வைத்து 45 நிமிடம் வேக விடவும். பின்பு டிரேவை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து பன்னை எடுத்துப் பரிமாறவும். ஒருவேளை பன்னின் மேல் பகுதி சற்று கடினமாக இருப்பதாக தோன்றினால், அவனின் கதவைத் திறந்து திறந்து ஃபுட் பிரஷ்ஷால் சிறிது எண்ணெயை பன்னின் மேலே தடவி மூடி வேக விட்டு பின்பு எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment