ராகி அவல் மிக்ஸர்
ராகி அவல் மிக்ஸர்
தேவையானவை:
ராகி மாவு - 500 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் அதிகரிக்கவும்)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உருக்கிய நெய் - 1 டேபிள்ஸ்பூன்
இளம் சூடான தண்ணீர் - மாவு பிசைய
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மிக்ஸர் செய்ய:
பூண்டுப் பல் - 3
வெள்ளை அவல் - 150-200 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
கறிவேப்பிலை - 50 கிராம்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (காரத்துக்கு ஏற்ப அதிகரிக்கலாம்)
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ராகி மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டு சலித்து வைக்கவும். இத்துடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தண்ணீரை ஊற்றி மிருதுவாகப் பிசையவும். நெய்யை ஊற்றி மீண்டும் மிருதுவாகப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்து முறுக்கு அச்சில் மாவைச் சேர்த்து எண்ணெயில் மாவைப் பிழியவும். தீயை உடனே குறைத்து மீண்டும் அச்சை எண்ணெயில் மேல் வட்டமாக பிழியவும். மாவுக் கலவை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு பிழியவும். அதிகம் பிழிந்தால் மாவு வேகாது. வெந்தவற்றை கரண்டியால் எடுத்து கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
மிக்ஸர் செய்ய:
முறுக்கு சுட்ட அதே எண்ணெயில் அவலைச் சேர்த்து பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பூண்டு, கறிவேப்பிலையை தனித்தனியாகப் பொரித்து வைக்கவும். இவற்றுடன் முறுக்கையும் சேர்த்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும். இதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
No comments:
Post a Comment