இறால் பிரியாணி
இறால் பிரியாணி
தேவையானவை:
இறால் - ஒரு கிலோ (சுத்தம் செய்தது)
வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 6 (கீறியது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எலுமிச்சைச் சாறு - அரை பழம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - இரண்டே கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - இரண்டரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
புதினா - கால் கைப்பிடி (நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - கால் கைப்பிடி (நறுக்கியது)
ரோஸ் வாட்டர் - கால் டீஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
பாசுமதி அரிசி - மூன்றரை கப்
தண்ணீர் - நாலே கால் கப்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், முந்திரிப்பருப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல் அரைக்கவும். சுத்தம் செய்த இறாலுடன் தயிர், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். பாசுமதி அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கரைய வதக்கி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு, நாலே கால் கப் தண்ணீரை இறால் கலவையில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் அளவுக்கு வேகவிடவும்.
பிறகு மூடியைத் திறந்து அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் விழுது, எலுமிச்சைச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி இறால் கலவையை மீண்டும் கொதிக்க விடவும். ஊறவைத்த அரிசியை வடித்து இறால் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும். மீண்டும் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் அளவுக்கு வேகவிட்டு
5 நிமிடங்கள் தீயை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை அணைக்கவும். விசில் சத்தம் அடங்கியதும், இறால் பிரியாணியை சட்னியுடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment