மொகலாய் அண்டா (முட்டை) பிரியாணி
மொகலாய் அண்டா (முட்டை) பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பச்சை மிளகாய் - 4 (ஸ்லைஸ்களாக வெட்டவும்)
வெங்காயம் - 3
பெங்களூர் தக்காளி - 4
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - 1
எண்ணெய் - 50 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 25 கிராம் (பதினைந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும்)
தயிர் - 25 மில்லி
நெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
முட்டை மசாலா தயாரிக்க:
வேக வைத்த முட்டை - 4
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தை அரை நிலா வடிவத்துக்கு நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி, இருபது நிமிடம் ஊற வைய்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, வேக வைத்த முட்டையைச் சேர்த்து வதக்கவும். முட்டை மசாலாவில் குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து இந்தக் கலவையை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து சுருங்க வதக்கவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, முந்திரி பேஸ்ட், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாஸ்மதிஅரிசியை வடிகட்டி, உப்பு சேர்த்து இதில் வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும்.
தீயை முற்றிலும் குறைத்து மூடி போட்டு அதன் மேல் ஒரு கனமான பொருளைத் தூக்கி வைக்கவும். இருபது நிமிடம் கழித்து, மூடியை திறந்து நெய் ஊற்றி கிளறி மசாலா முட்டையை வைத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment